செவ்வாய், 8 ஜனவரி, 2013

பல்லவமன்னர்கள் கள்ளர்களே-பாகம் 2

பல்லவமன்னர்கள் கள்ளர்களே ! – ஆதாரங்கள் வருமாறு(பாகம்--2)

புதுக்கோட்டை தொண்டைமான்—கள்ளரே!

மாட்சிமை தங்கிய புதுக்கோட்டைமன்னர் திரு.கார்த்திக் தொண்டமான் அவர்கள் கள்ளர் என்பதை அனைவரும் அறிவர். இவருடைய முன்னோர்கள் வேங்கடமலைப் பகுதியை ஆண்ட தொண்டைமான் கோட்டையிலிருந்து வந்தவர்கள் என்று இராஜ அனுராக மாலை கூறுகின்றது. பண்டை காலத்தில் விழுச்சீர் வேங்கட மலையும் சேர்ந்ததே தொண்டை மண்டலம் எனப்பட்டது. முற்காலத்தில் திருப்பதி மலையில் வணங்கப்பட்டவர் வைணவ வெங்கடாசலபதி அல்ல. சிவபெருமானே என்பதை சில ஆய்வாளர்கள் கருதுவதை இதன் முதல் கட்டுரையில் காட்டியுள்ளேன்.

வேங்கடமலை இணைந்த தொண்டைநாட்டை ஆண்டவர்கள்—கள்ளர்களே!

திருப்பதி மலை உட்பட்ட தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள் கள்ளர்களே.இதனை கள்ளில் ஆத்திரையனார், மாமூலனார், தாயங்கண்ணனார் போன்ற தகைசான்ற பெரும் புலவர் பெருமக்கள் பன்னிரண்டு அகநானூறு பாடல்களில் தெரிவித்துள்ளனர். அப்பன்னிரண்டு பாடல்களையும் இக்கட்டுரையின் முதல்பகுதியில் குறிப்பிட்டுள்ளேன்.வேறு இன மக்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டனர் என எந்த அகநானூறு பாடலும் குறிப்பிடவில்லை.இவர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்டதால் தொண்டைமான் என்ற பட்டம் பெற்றனர். தொண்டைமான், தொண்டையர், தொண்டைமான் கிளையார், தொண்டைப்பிரியர், தொண்டார், பல்லவர், பல்லவராயர், பல்லவாண்டார், பல்லவநாடார், பல்லவதரையர் என்ற பட்டமுடைய கள்ளர்கள் இவர்களின் வழித் தோன்றல்களே ஆவர். பன்னிரண்டு பாடல்களில் கீழ்கண்ட இரண்டு பாடல்களை மட்டும் விளக்க உரைக்காக (ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைபோல்) இங்கு எடுத்தாண்டுள்ளேன்.

1.கழல் புனை திருந்தடிக் களவர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி. .
விழவுடை விழுச்சீர். வேங்கடம். . (அகம்.61) (மாமூலனார் பாடியது)

பொருள்..வீரக்கழல் அணிந்தவன் களவர் கோமான். அவன் வீர்ர்கள் பலரோடுசேர்ந்து வில்லில் வலிமையான நாணை ஏற்றி அம்புமழைப்பொழிந்து மழவர் நாட்டை வென்று அவர்களை அடிபணியச்செய்தவன். அவன் திருவேங்கடமலையில் உறைபவன்.

2.வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட்
டோங்குவெள்ளருவி வேங்கடத்தும்பர் அகம்.213) (தாயங்கண்ணனார் பாடியது)

பொருள்..வேங்கடமலையானது போர்ப்பயிற்சி உடைய யானைகளை வெல்லும் . தொண்டை நாட்டினருக்கு உரியது.

திருப்பதி 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உடையது. இம்மலைப்பகுதியை ஆண்ட கள்ளர்கள் அக்காலத்திற்கு முன்பிலிருந்தே அப்பகுதியை ஆண்டனர்.. எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்காத மழவர்(மறவர்) குடியினர் எவ்வித தடையுமின்றி தமிழ்நாட்டின் வடக்கே திருவேங்கட மலைவரையில் சுற்றித்திரிந்தனர்(அகம்.61). பல்லவ இனத்தைப்பொருத்தவரை, ஓரினத்தார், நாங்களே பல்லவர்கள் என்று கூறி விளம்பரம் செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாவிடினும் அவர்கள் அவ்வாறு கூறிக்கொண்டு மகிழ்ச்சி அடைவதை நாம் கெடுக்கவேண்டியதில்லை. ஏனெனில், அவர்களும், முக்குலத்து மறவர்களுடன் தோளுக்கு தோளாக இணையாக நின்று போர்க்களங்களில் ஈடுபட்டனர்.எனினும், முக்குலத்து மறவர்கள் தங்கள் குலப்பெருமையை அடுத்த இனத்தார் தட்டிச்செல்வதை அறியாமல் இன்னும் உறங்குகின்றனர். அவ்வாறு நாம் நீண்ட காலம் உறங்கிவிட்டால், திருப்பதி சிவன் கோயில்—பெருமாள் கோயிலான கதையாக மாறிவிடும் என எச்சரிக்கவிரும்புகிறேன்.

அகநானூறு விளக்கமும் மயிலை சீனி.வேங்கடசாமியின் கருத்தும்..

அகநானூறு 61ல் (1) களவர் கோமான் .(2)மழபுலம் வணக்கிய மாவண் புல்லி (3) விழுச்சீர் வேங்கடம் என்ற வார்த்தைகள் நம் ஆய்வுக்கு உட்படுகின்றன.அகம்.213 கூறும் தொண்டையர் என்ற வரியும் இணைந்து நமது ஆய்வுக்கு உட்படுகின்றன. களவர் என்றால் களம்(போர்க்களம்) புகுவோர் என்று பொருள்படும்….நம் முன்னோர்கள் போர்க்களம் சென்று போரிடுவதையே குலத்தொழிலாக செய்துகொண்டிருந்ததால் “களவர்” என முற்காலத்தில் அழைக்கப்பட்டனர். (இதன் விளக்க உரையை எனது முதல் கட்டுரையாகிய இராசராசசோழன் கள்ளரே என்ற கட்டுரையில் காண்க) இதனைப்பற்றி, மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளதை மீண்டும் இக்கட்டுரையில் கீழே குறிப்பிடுகின்றேன்:- களவர் தமிழ்ச் சொல். களம் என்ற சொல்லிலிருந்து பெறப்படும்., களம் என்றால் போர்க்களம். களவர் என்றால் போர்க்களம் சார்ந்த மக்கள் அல்லது களம் புகுவோர் என்று பொருள்படும்.“பழந்தமிழகத்தின் வடக்கில் இருந்த வேங்கடநாட்டை அரசாண்ட சிற்றரசர் புல்லி என்று கூறப்படுகின்றார். கள்வர் கோமான் புல்லி என்று அவர் கூறப்படுகிறார். கள்வர் என்பதைக் களவர் என்றும் படிக்கலாம். பழைய ஏட்டுச் சுவடிகளில் புள்ளியிட வேண்டிய எழுத்துக்களுக்குப் புள்ளி இடாமலே எழுதும் வழக்கம் இருந்தது. ஆகவே, இந்தச்சொல் களவர் என்பதா கள்வர் என்பதா என்பதை அறுதியிட்டுக்கூறமுடியவில்லை. இந்தச்சொல்லைக் களவர் என்று கொண்டு திரு.மு.இராகவையங்கார் களவர் என்பது களப்பிரரைக் குறிக்கிறது என்று எழுதினார். டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்காரும் இதே கருத்தைக் கூறியுள்ளார். வேங்கட நாட்டையாண்ட களவர் அல்லது கள்வர்தான் (புல்லி அரசர்) களப்பிரர் என்று இவர் கூறுகிறார். இந்த அறிஞர்கள் கூறுவது ஏற்கத் தக்கது அன்று. வேங்கட நாட்டிலிருந்த களவர் அல்லது கள்வர் என்பவர் தமிழர். களப்பிரரோ தமிழர் அல்லாத கன்னடர். மற்றும் சங்ககாலத்து வேங்கடநாடு தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த தமிழகத்தின் பகுதியாக இருந்தது. ஆகவே, தமிழராகிய கள்வர்(களவர்) வேறு. கன்னடராகிய களப்பிரராக இவர்கள் இருக்க முடியாது. கள்வர்(களவர்) வேறு. களப்பிரர் வேறு. களப்பிரரின் தாய்மொழி கன்னட மொழியே. அவர்கள் தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர்.” இவ்வாறு மயிலை சீனி வெங்கடசாமி எழுதியுள்ளார்.

களவர் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட நம் இனத்தவர்கள், புள்ளிவைத்து எழுதும்போது கள்வர் என்றும் தற்காலத்தில் கள்ளர் என்றும் மரூவி வந்துள்ளது. இதை அறியாத ஆராய்ச்சியாளர்கள் மிகவும் குழப்பம் அடைந்துவிட்டனர். திரு.கே.ஆர்.வெங்கட் ராம அய்யர் கூறுவதும் அதனை ஏற்று இராசராசன் என்ற குறுநூல் எழுதிய சா.கணேசன் கூறியிருப்பதும் நகைப்பிற்குரியது. அவர் கூறுவதாவது…. “மைசூர்ப் பிரதேசத்தில் நந்தி மலைப்பகுதியிலிருந்து கோலார் வழியாகத் தமிழகத்தை அடைந்த ஒரு குறுநில மன்னர் குடியைச் சேர்ந்தவர்களே களவரர்களாக இருக்கக் கூடும். அவர்கள நேரே காவிரிக்கரையை அடைந்து சோழநாட்டைக் கைப்பற்றி அங்கு தங்கள் ஆட்சியை ஏற்படுத்தி யிருக்க வேண்டும்.கி.பி.7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் செந்தலையைத் தலைநகராகக் கொண்டு
ஆண்ட முத்தரையர்களே களவரராக இருக்கக்கூடும் என செந்தலைக் கல்வெட்டில் முத்த ரையர்கள் களவர் என்று குறிக்கப்படுவதை திரு.கே.ஆர்.வெங்கடராம ஐயர் சான்றாகச்சுட்டி காட்டுகிறார்கள்.” களவர் என்பது திரிந்து இன்றும் களாவர், கிளாவர் என்ற பட்டப்பெயர் கள்ளர்களுக்கு இருப்பதை இவர்கள் அறியாததாலேயே இவர்களை கன்னடர் எனக்கருதி யுள்ளனர். கன்னடர்களும் நம்மிடமிருந்து பிரிந்து சென்ற திராவிட இன மக்கள் ஆவார். ஆயினும் கள்ளர்கள் ஒருபோதும் கன்னடம் பேசியவர்கள் அல்லர். அவர்கள் சுத்தத் தமிழர்கள்.

அகநானூறு புறநானூறு(எ) சங்கஇலக்கியங்கள் எழுதப்பட்ட காலம்-கி.மு.500--கி.பி.200

சங்க காலத்தில் நம்முன்னோர்கள் வேங்கட நாட்டை(தொண்டை நாட்டை) ஆண்டனர் என்று மயிலை சீனி வேங்கடசாமி மேற்கண்ட அகநானூறு பாடல்களின் அடிப்படையில் கூறுகிறார்.சங்காலத்தை பின்வருமாறு வரலாற்று ஆய்வாளர்கள் அறுதியிட்டுள்ளனர்:-

தலைச்சங்கம்(பாண்டியநாட்டின்தலைநகரம்தென்மதுரை)…….கி.மு.400—--------200 இடைச்சங்கம்(பாண்டிய நாட்டின் தலைநகரம் கபாடபுரம்). …. கி,மு,200-கிபி.100
கடைச்சங்கம்(பாண்டிய நாட்டின் தலைநகரம் வடமதுரை) ….. கிபி.100---கிபி.300
(கி.மு,400 முதல் கி.பி.300 வரை உள்ள காலப்பகுதி சங்க காலம் எனப்படும்)

புள்ளிவைத்து எழுதும் காலத்திற்கு முற்பட்டக்காலத்திலேயே மாமூலனார் அகநானூறு 61 எழுதி அதில் களவர் கோமான் எனக்குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மேலும் அக நானூறும், புறநானூறும் எழுதப்பட்ட காலம்-- சங்க காலம்.எனவே அந்நூல்கள் சங்க இலக் கியங்கள் எனப்படுகின்றன. சங்க இலக்கிய காலம் கி.மு.500 முதல் கி.பி.200 வரை என டாக்டர் மு.வரதராசனார் தமிழ்இலக்கிய வரலாறு என்னும் நூலில் பக்கம்.25ல் குறிப்பிடு கிறார். மூன்று சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டிய மன்னர்களையேச் சேரும்.எனவேதான்,வில்லி.பாயிரம் 7 கீழ்க்கண்டவாறு பாண்டிய மன்னனுக்கும் அவன் வளர்த்த பாண்டிய இளவரசி--தமிழ்பாவைக்கும் புகழாரம் சூட்டுகின்றது.(நான்காம் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டித்துரைத் தேவர் உட்பட தமிழ்வளர்ந்த பெருமை முக்குலத்து மன்னர்களையேச்சேரும்.அரசியல் வாதிகள் அவற்றை எல்லாம் மறைக்க முற் படுகின்றனர்.முக்குலத்து மக்களின் தேர்தல் வாக்குகளை மட்டுமே மனதில் கொண்டு, மற்ற அருமை பெருமைகளை மறைப்பது ஏனோ?இதை முக்குலத்து இளைஞர்கள் சிந்திப்பார்கள் என நம்புகின்றேன்.அவர்கள் கட்டபொம்மனுக்கு முன்பே வரிகொடுக்க மறுத்த பூலித் தேவனையும் வடக்கே போராடிய ஜான்சி ராணிக்கு முன்பே வெள்ளையர்களை எதிர்த்து மறவர் சீமையில் போராடிய வீரமங்கை வேலு நாச்சியாரையும் மறந்தது ஏனோ?)…

“பொருப்பிலே பிறந்து தென்னவன்
புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வைகை
ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர்
நினைவிலே நடந்தோர் என
மருப்பிலே பயின்ற பாவை
மருங்கிலே வளருகின்றாள்”

சங்க காலத்தை நான் மேலே காட்டியுள்ளதையும் ஒப்புநோக்குக.



சாதியில்லா தமிழகம்…(களமர்..களவர்)...

களவர் என்று நம் முன்னோர்கள் அழைக்கப்பட்ட அத்தொல்பழங்காலத்திலேயே தொண்டை நாட்டை—வேங்கட மலைப்பகுதியை நம் மூதாதையர்கள் ஆண்டனர் என்பதும் ஈண்டு அறிந்து இன்புறத்தக்கது வடக்கே வாழ்ந்த ஆரியர்கள்,விந்தியமலை கடந்து தென்னாடு வந்த காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டு. அக்காலம் தமிழகத்தில் சாதி வேறுபாடு இல்லாத காலம். தமிழக மக்கள் கூட்டம் கூட்டமாகப் பிரிந்து தங்கள் குலத்தொழிலை செய்து வந்த காலம். அம்மக்கள் அனைவரும் அவரவர்கள் செய்துவந்த குலத்தொழிலின் அடிப்படையில் சமுதாயப் பெயரிட்டு அழைக்கப்பட்டனர். இதனைப்பற்றி டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலில் பக்கம் 161ல் கீழ்க்கண்டவாறு குறிப் பிடுகின்றார்…..”தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள், மக்கள் செய்துவந்த தொழிலுக்கு ஏற்பத்தோன்றியிருந்தன. அளவர்,இடையர், இயவர், உமணர், உழவர்,களமர்…. களமர் என்ற சொல்லும் களவர் என்ற சொல்லும்,களம் என்றஅடிப்படைச்சொல்லி லிருந்து பிறந்தன.களம் என்ற சொல்லுக்கு இருபொருள்கள் உண்டு. (1)களம் என்றால் நெற்களம். எனவே, இப்பொருளைக்குறிக்கும் சொல்லிலிருந்து பிறந்தது களமர் என்ற குலப்பெயர். ஆகையால் களமர் என்பதற்கு நெற்களத்துமேட்டில் வேலைசெய்யும் மருத நிலத்தொழிலாளி என்று பொருள்.(2) களம் என்றால் போர்க்களம். எனவே இப்பொருளைக் குறிக்கும் சொல்லிலிருந்து பிறந்ததுதான் களவர் என்னும் (அகம்.16 குறிப்பிடும்) சொல். ஆகையால், களவர் என்பதற்கு போர்க்களம் சென்று போரிடுவதையே குலத்தோழிலாகக் கொண்ட போர்க்களம் சார்ந்த மக்கள் என்று மயிலை சீனி வெங்கடசாமி சரியாகப்பொருள் எழுதினார். இதை அறியாத அரைகுறை ஆராய்ச்சியாளர்கள் களவர் என்றால் களப்பிரர் என்னும் கன்னடர் என்று பொருள் கண்டனர். அவர்கள் கள்ளர்களின் களாவர் என்ற பட்டப் பெயரைக்கூட அறியாத தமிழர்கள் எனபது திண்ணம். கள்ளர்களின் பட்டப்பெயரை அறியாது வரலாறு எழுதுவோர் அரைகுறை ஆராய்ச்சியாளர்கள் என்பதற்கு இதுவே சான்றாகும். நம் முன்னோர்கள் வாழையடி வாழையாக போர்க்களம் சென்று போரிடு வதையே குலத்தொழிலாக செய்து வந்ததால் களம் புகுவோர் என்னும் பொருளில் களவர் என்று குலத்தொழில் பெயரிட்டு அழைக்கப்பட்ட பழங்காலம் அது. அக்காலத்தில் சாதி வேறுபாடு இல்லை. உணவுக்கலப்போ,திருமணக்கலப்போ தடைசெய்யப்பட வில்லை……. (விரிவான விளக்கவுரையை என்னுடைய இராசராச சோழன் கள்ளரே என்ற கட்டுரையில் காண்க).

ஆரியர்களின் தமிழக வருகையும் சாதிப்பிரிவும்(மழவர் என்ற சொல் மறவர் ஆனது)…..

மக்கள் செய்துவந்த குலத்தொழிலுக்கு ஏற்ப பல குலங்கள் தமிழகத்தில் பிரிந்து இருந்தன. பிரிந்திருந்த இக்குலங்களுக்குள் ஏற்றத் தாழ்வு கற்பித்து சாதி என்னும் வேண்டாத நச்சு வித்துக்களை தமிழ் சமுதாயத்தில் விதைத்தவர்கள் ஆரியர்களே என டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார். எனவே, ஆரியர்கள் தமிழகத்திற்குள் வந்தபிறகுதான் சாதிவேறுபாட்டை ஏற்படுத்தினர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறதல்லவா? களவர் என்னும் குலத் தொழில் பெயர் ஆரியர்கள் தமிழகம் வருங்காலத்திற்கு முன்பே இருந்தது என்பது திண்ணம். வந்தபிறகு சாதிப்பெயராகவும் முதலில் இருந்திருக்கவேண்டும். எனினும் களவர் என்ற பெயர் வழங்கிய காலம் மிகத் தொன்மையான ஆதிகாலம். களவர் என்னும் கூட்டுக்குடும்பத்தில் பிறந்து தன்னுடைய மூத்த சகோதரனை முன்மாதிரியாகக்கொண்டு போர்க்களத்தொழிலையே குலத்தொழிலாக செய்துவந்தவர்களே மறவரும் அகமுடையோரும் ஆவர். மழவர் என்னும் சொல்லே மரூவி மறவர் என்னும் சொல் பிறந்தது. மழவர் எனினும் மறவர் எனினும் வீர்ர் என்றே பொருள் கண்டனர் நச்சினார்க்கினியர், இளம்பூரணார், கல்லாடர், சேனாவரையர், தெய்வச்சிலையார் போன்ற தமிழ் புலமைசான்ற புலவர் பெருமக்கள். மறவர் என்றால் அச்சொல் முக்குலத்து மறவர்களையே குறிக்கும். அவர்களைப்போன்று வீரச்செயல் புரிந்தோரை மறவர் என்று ஒப்பிட்டுக்கூறுவரேயன்றி, மறவர் என்னும் சொல் மற்ற எந்த இனத்தையும் குறிக்காது. ஆனால், மறவர் என்ற சொல் தமிழ் இனத்தவர் அனைவரையும் குறிக்கும் என்று சில அறிவிலிகள் கூறுவர். இவர்கள் இவ்வாறு கூறுவது முக்குலத்தினர்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியாலேயே அன்றி, முக்குலத்து மறவர்களின் பெருமையை மறைப்பதற்காகவே அவர்கள் அவ்வாறு கூறுவர் என்பதை முக்குலத்து மக்கள் தெளிவாக உணரவேண்டியது அவசியம் ஆகும். மறவர், மழவர் என்ற பெயர்கள் உடையோர் வாழையடி வாழையாக போர்க்களத்தொழிலில் ஈடுபட்டோரின் வழித்தோன்றல்க்ளையே குறிக்குமேயன்றி மற்றவர்களைக்குறிக்காது. முக்குலத்து மறவர்களே பழங்காலத்தில் தொல்படையினர் எனப்பட்டனர். இவர்களே வாழையடிவாழையாக போர்த்தொழிலில் ஈடுபட்டோர் ஆவர். மற்றவர்கள் தற்காலிகப்படையினர் ஆவர். தற்காலிகப்படையினர் என்போர் போர்க்காலங்களில் மட்டும் சேர்க்கப்பட்டு, போர் முடிந்தவுடன் கலைத்துவிடுவர். அவர்கள் வாழையடிவாழையாக போர்த்தொழிலை குலத்தொழிலாக செய்தோர் அல்லர்.

தொல்படையினர்(தொல்காப்பியர், திருவள்ளுவர் & தேவநேயப்பாவாணர் கூறுவது)..…

களவர் என்போரைப்பற்றி தொல்காப்பியர் “வேந்துவிடு முனைஞர் வேற்று புலக்களவின் ஆதந்து ஓம்பல் மேவற்றாகும் வெட்சி” என்று தெளிவாகக் குறிப்பிட்டார். வேந்தனால் ஏவிவிடப்பட்ட முனைஞர் என்றார் தொல்காப்பியர். முனைஞர் என்றால் முனை ஊரகத்தில் உள்ளோர் என்று நச்சினார்க்கினியர், இளம்பூரணார் போன்ற புலவர்கள் பொருள் எழுதியுள்ளனர். முனை ஊரகத்தில் உள்ளோர் என்றால், நாட்டின் எல்லைப்புறத்தில் குடியேறி எதிரிகள் நாட்டிற்குள் புகுந்துவிடாமல் பாதுகாக்கும் படையினர் எனப்பொருள்படும். இவர்கள் வாழையடி வாழையாக முனைஞர்களாவர். பகல் இரவு என்றில்லாமல் எந்நேரத்திலும் (நடுநிசியிலும் கூட) எல்லைக்குள் ஊடுருவும் எதிரிகளுடன் போர்செய்யத்தயார் நிலையில் இருந்தோர் ஆவர். போர்க்களங்களில் இவர்களே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வீர மறவர்கள்.. இவர்களை பற்றி திருவள்ளுவர் கூறியுள்ளதும் ஈண்டு நோக்கி மகிழத்தக்கது ஆகும்.

“உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண், தொலைவுஇடத்துத்
தொல்படைக்கு அல்லால், அரிது” (குறள் – 762)

பொருள்..தான் சிறியபடையாய் போருக்குச்சென்று அழிவு வந்தாலும்,தனக்கு
வரும் வீரமரணத்திற்கு அஞ்சாத வலிமை, வாழையடி வாழையாக
வரும் தொல்படைக்கு அன்றி பிறபடைக்கு இல்லை.

அழிவுஇன்று, அறைபோகாதுஆகி, வழிவந்த
வன்கணதுவே, படை. (குறள்-764)

பொருள்..அழிவு இல்லாததாய், வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்றுதொட்டு
வாழையடிவாழையாய் வந்த வலிமையான வீரத்தையுடையதே,சிறந்த
படையாகும்.

மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் கூறுவது(பழந்தமிழாட்சி பக்.47-48)… மூலப்படையை வள்ளுவர் தொல்படை என்பர். வாழையடி வாழையாக இருந்து வருவதும் எவ்வகை ஊற்றையும் பொருட்படுத்தாததும் இறப்பிற்கு அஞ்சாததும் போரையே விரும்பு வதும் அரசனைக்காக்க என்றும் உயிர் ஈந்துவதும், எக்காரணத்தை முன்னிட்டும் அறை (சோரம்)போகாததும் வென்றே மீள்வதும் தொல்படைத் திறங்களாம்.

உலகிலேயே களம்(போர்க்களம்) என்ற அடிப்படைச்சொல்லிலிருந்து பிறந்த ஒரே இனச்சொல் களவர் என்ற நம் இனச்சொல் மட்டுமே. களவர் என்ற கூட்டுக்குடும்பத்தி லிருந்து பிறந்த மற்ற இரண்டு சொற்கள் மறவர் மற்றும் அகமுடையோர் என்ற சொற்களாகும். இவர்கள் மூவரும் போர்க்களத்தொழிலை குலத்தொழிலாக தலைமுறை தலைமுறையாக(வாழையடி வாழையாக) செய்து வந்தனர். களவர், மறவர் மற்றும் அகமுடையோர் என்று அவர்கள் செய்துவந்த போர்க்கள குலத்தொழில் பெயராலேயே பண்டைக் காலம் முதல் பல நூற்றாண்டுகளாக அழைக்கப்பட்டனர். அக்குலத்தொழில் பெயர்களையே பின்நாளில், தமிழகம் புகுந்த ஆரியர்கள் சாதிப்பெயர்களாக்கிவிட்டனர். மற்ற எந்த தமிழ் இனச்சொல்லும் இவ்வாறு களம்(போர்க்களம்) என்ற சொல்லிலிருந்து பிறக்கவில்லை.எனவே, இவர்களையே தொல்படை என்றார் திருவள்ளுவர்(குறள்762&764)

களவர் என்ற சொல் கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கு முன்பே பிறந்தது எங்ஙனம்?

களவர் என்று நம்முன்னோர்கள் அழைக்கப்பட்ட அக்காலத்தைக்காண வேண்டி ஆராய்வோம். ஆரியர்கள் தமிழகத்தில் கால்தடம் பதித்த காலம் ஏறத்தாழ கி.மு. ஆறாம் நூற்றாண்டு என. டாக்டர் கே,கே, பிள்ளை அவர்கள் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலில் பக்கம் 67ல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடுவது வருமாறு…“.. வடமொழிக்குஇலக்கணம் வகுத்த பாணினி என்பார் (சு.கி.மு.600) வடநாட்டுப் பூகோள அமைப்பை நன்கு அறிந்தவர். அவர் நருமதைக்குத் தெற்கில் கலிங்கத்தை மட்டும் குறிப்பிடுகின்றார். ஆனால், தென்னாட்டைக் குறிப்பிடவில்லை. அவருக்குக் காலத்தால் பிற்பட்டவரான காத்தியாயனர்(கி.மு.4ஆம் நூற் றாண்டு) தம் இலக்கண நூலில் தென்னிந்திய நாடுகள் அனைத்தையுமே குறிப்பிடுகின்றார். இதைக்கொண்டு வடநாட்டு ஆரியர்கள் கி.மு. 600-க்குப் பிறகே, தமிழகத்திற்கு வந்து குடி யேறியிருக்கவேண்டும் என்று கருதவேண்டியுள்ளது……….ஆரியவர்த்தத்தின் தெற்கெல்லை விந்தியமலையென மனுதருமம் கூறுகின்றது. எனவே, நாடு கவரும் எண்ணமும் ஆரியர் களுக்கு இருந்திருக்கமுடியாது. ஆய்ந்து பார்க்குமளவில், தம் நாகரிகத்தையும், பண்பாடுகளையும், கொள்கைகளையும் அயலாரிடத்தும் பரவச் செய்யவேண்டும் என்னும் நோக்கம் ஒன்றே அவர்களை உந்தியிருக்கவேண்டும் என்று கருத இடமுள்ளது. சென்றவிட மெல்லாம் ஆரியருக்கு உண்டியும், உடையும், உறையுளும் ஆட்சிப் பொறுப்பும் வழங்கு வதற்குத் தமிழகத்து மன்னர்க்ளும் உடன்பாடாக நின்றனர்……வடநாட்டுடன் வாணிகத் தொடர்பை மேற்கொண்ட தமிழகத்துக்கு மற்றொரு சீர்கேடு விளையலாயிற்று. இனம், குலம் ஆகிய வேறுபாடுகளினால் இடர்ப்பட்டுத் தடுமாறாத தமிழரின் சமூகம் காலப்போக்கில் பல சாதிகளாகப் பிரிந்தது. மக்களுக்குப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. ஆரியர்கள் தங்கள் வாழ்விற்கு இடந்தேடியும், மன்னரின் ஆதரவை நாடியுமே தமிழகத்தில் வந்து குடியேறினார்கள். அவர்கள் தமிழருடன் போர் புரியவில்லை. போரிட்டு நாடு பிடிக்கவுமில்லை. ஆரியரின் ஊடுருவல் தமிழகத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. (பக்கம் 316)அவர்கள் தமிழகத்திற்குள் வரும்முன் தமிழர்களின் வீடுகளில் நடை பெற்றுவந்த சமய சடங்குகளையெல்லாம் செய்துவந்தவர்கள் சங்கக்கால பார்ப்பனர் ஆவர். சங்கக்கால பார்ப்பனர் என்போர் சுத்தத்தமிழர்கள். அவர்கள் பூணூல் பூண்ட தமிழக பார்ப்பனர்/குருமார் எனப்பட்டனர்(அறிவர் அல்லது சித்தர்) அவர்களுடைய பண்பாடும் நாகரிகமும் தமிழ்மக்கள் வளர்த்து வந்தவையேயாம். அவர்கள் பேசியதும், புலமை பெற்றதும் தமிழ்மொழியில்தான். அவர்கள் தம்மைத் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தமிழராகவே எண்ணி வாழ்ந்தனரே யல்லாது, தாம் அயலிடங்களிலிருந்து குடிவந்தவர்கள் என்றோ, அயல்மொழி பேசியவர்கள் என்றோ ஒரு காலமும் கருதியவர்கள் அல்லர்.ஆனால் பல்லவர் காலத்திலும், சோழர், பாண்டியர் காலத்திலும் மன்னரின் அழைப்பின் பேரிலோ, தாமாகவோ தமிழகத்திற்குள் அலையலையாக வந்து குடியேறிய பிராமணர்க்ள் புதுப்புதுப் பெயர்களைப் பூண்டவர்கள், புதிய குலதருமத்தைக் கடைப்பிடித்தவர்கள், வடமொழியை யன்றி வேறு மொழியை விரும்பாதவர்கள்,வடமொழியின் ஏற்றத்துக்கு என மன்னர்களிடம் பலசலுகைகளையும் செல்வாக்கையும் பெற்றுக்கொண்டு தமிழுக்குக்கூற்றமாக வந்தவர்கள்.தமிழகத்துவேந்தர்கள்
தமிழ் பார்ப்பனர்களிடம் எக்குறைபாடுகளைக் கண்டார்கள் என்பது விளங்கவில்லை. தமிழ கத்தில் சமய வளர்ச்சியும் வேதப்பயிற்சியும், ஆகமங்களின் வளர்ச்சியும், கோயில் வழி பாடும் பலதரப்பட்ட துறைகளில் விரிவடையவே, அவற்றுக்கு ஏற்றவாறு தம்மைத் திருத்தியமைத்துக்கொள்ளும் ஆற்றல்கள் தமிழ்ப்பார்ப்பனர்களிடம் பெருகவில்லை போலும். ஆனால், வடவரின் இலக்கியமும், சமயக் கருத்துகளும் பண்பாடுகளும் தமிழ்நாட்டில் பெருக்கெடுத்துப் பாயவே அவற்றை வளர்ப்பதற்கும், மேற்கொண்டு பல புதுமைகளைப் பெருக்கிக் கொள்ளுவதற்கும், மன்னர்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பிராமணரை இறக்குமதி செய்து கோயில்களிலும், மடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் அவர்களை அருச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தினர். வேதநெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடிபுகுந்த பிராமணருக்குப் பொன்னையும், பொருளையும், குடியுரிமைகளையும் வாரி வழங்கினர். பிராமணருக்குத் தனி நிலங்களும் முழுமுழுக் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் எனப் பல பெயரில் வழங்கின. இக்குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிருவாகத்துக்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல்படா. அக்கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், கடமைகள், ஆயங்கள் முதலியவற்றினின்றும் முழு விலக்கு அளிக்கப்பட்டன. ஒவ்வொரு கிராமத்தின் உள்ளாட்சிக்கும் ஒரு மகாசபை அமைத்துக் கொண்டு பிராமணர்க்ள் தத்தம் கிராமத்தின் நிருவாகத்துக்குத்தாமே பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பிராமணர் தமிழகம் முழுவதும் பரவிக் குடியமர்ந்தார்கள். உள நிறைவுடன் நல் வாழ்க்கையில் நின்று வேதம் ஓதி, இறைப்பணி புரிந்து,அறம் ஓம்பி, மக்களிடையே கல்வியறிவையும் ஆன்மீக விழிப்பையும் தோற்றுவிப்பதற்காகவே மன்னரும் மக்களும் அவர்கட்குத்துணை நின்றார்கள். ஆனால், விளைவோ வேறு விதமாயிற்று. தமிழ் மன்னரும் தமிழ்மக்களும் வரையாது வழங்கிய வாழ்க்கை நலன்களைப்பெற்ற பிராமணர்- கள் தனித்து வாழ்ந்து, மக்களிடையே குல வேறுபாடுகளைப்பெருக்கித் தமிழர் அனைவரையுமே சூத்திரர் என்ற இழிகுலத்தினராக்க் கருதிக்கோயில்களிலும், மடங்களிலும், ஏனைய பொது அறச்சாலைகளிலும் ஒதுக்கிவைத்துவிட்டார்கள்………….உழைப்பின்றியே தானமாகப்பெற்ற நிலங்களும் ஊர்களும், அரசாங்கச் செல்வாக்கும், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப்பெற்ற பிராமணர்கள் அவையாவும் எக்காலமும் தம்மிடமே நிலைத்து நிற்கவும், மேன்மேலும் வளர்ந்து வரவும், தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்து வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள். மன்னரின் முழு ஆதரவையும் அவர்கள் பெற்றனர். வேந்தர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் வமிசங்களையும், கோத்திரங்களையும், சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத்தார்கள். மன்னர்களும் சாதி ஒழுக்கத்தை நிலைநாட்டுவதே தம் சீரிய கடமையாம் எனக் கூறும் மெய்க்கீர்த்திகளைப்புனைந்துகொண்டனர். பூணூல் அணியும் வழக்கத்தை தமிழ்ப் பார்ப்பனரிடமிருந்து ஆரியர்கள் கைக்கொண்டனர். ஆதியில் ஆரியர்கள் பூணூல் அணியும் வழக்கம் உடையவர்கள் அல்லர். தமிழ்ப்பார்ப்பனர்கள் ஆகம நூலறிவுகாட்ட அணிந்த பூணூலையே தம் வேதஅறிவுகாட்ட ஆரியர்கள் அணிந்துகொண்டு வேதம் மதச்சடங்கு களை ஆற்றத் தொடங்கினர். இவ்வாறு டாக்டர் கே.கே.பிள்ளை எழுதியுள்ளார்.

களவர்கோமான்புல்லி.மழபுலம்வணக்கிய.விழுச்சீர்வேங்கடம்&தொண்டையர்(அக.61&213)
என்ற வரிகள் மூலம் தொண்டைமான் தோன்றியது கி.மு.6ஆம் நூற்றாண்டுக்கு முன்பே

ஆரிய வரலாற்றை அறிந்தோர், களவர் என்னும் குலப்பெயர் ஆரியர்கள் தமிழகம் புகுந்த(கி.மு.5 அல்லது 6-ஆம் நூற்றாண்டுக்கு)முன்பே உண்டானது என்பதையும், ஆரியர்கள் தமிழகம் புகுந்தபின், சாதிப்பெயராகியதையும், அக்காலம் கி.மு.3 அல்லது 4-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே என்பதையும் நன்கு உணருவர். அகம்.61ல்கூறப்பட்டுள்ள களவர் கோமான் ..புல்லி கி.மு.5 அல்லது 6-ஆம் நூற்றாண்டில் வேங்கடமலை உட்பட்ட தொண்டை நாட்டை ஆண்டவர் என்பதும், தொண்டைமண்டலத்தை ஆண்டதால், அவர் தொண்டைமான் என்ற பட்டம் பெற்றதையும் அகம்.213 மூலம் அறிகிறோம். எனவே, தொண்டைமான் என்ற பட்டம் கள்ளர்களுக்கு கி.மு.5 அல்லது 6-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகலாம் என்பது தெளிவான முடிவாகும். மேலும், மழவர் வரலாறு மிகவும் தொன்மையானது. கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி என்று தொல்காப்பியரால் முதல்படலத்தில் முன்மொழியப்பட்டு, கி.பி.8.ஆம் நூற்றாண்டில் அக்கருத்தை புறப்பொருள் வெண்பாமாலை பாடல் 35ல் அய்யனாரிதனார் என்னும் சேரர் குடி வழிமொழிவதையும் நாம் கூர்ந்து நோக்குங்கால், அவர் கூறிய கரந்தை மறவர்—மழவர்களே ஆவர்.(இதனைப்பற்றிய முழு விவர ஆய்வினை பிறகு எழுதுவேன்) இம்மழவர்கள் (மறவர்கள்) தமிழகம் எங்கும் எவ்வித தங்குதடையுமின்றி குறும்படைத்தரித்து சுற்றித்திரிந்தனர் என்றும், எந்த மன்னனின் ஆணைக்கும் இவர்கள் கட்டுப்பட்டு நடக்கவில்லை என்பதையும் வரலாறு கூறுவதை நோக்குங்கால், இவர்கள் வேங்கடமலைவரை சுற்றித்திரிந்தபோது, அங்கு ஆட்சிபுரிந்த களவர் கோமான் புல்லியுடன் பிணக்கு ஏற்பட்டு போர் மூண்டது என்பதை அகம்.61ல் ..மழபுலம் வணக்கிய. மாவண் புல்லி.. என்ற வரிகள் மூலம் அறிகிறோம். குறும்படை என்றால், மழவர்கள்(மறவர்கள்) எப்போதும் இடதுதோளில் நெடிய நாண்ஏற்றப்பட்ட வில்லை தொங்கவிட்டிருப்பர்.அத்துடன் தனது முதுகில் வலதுதோளில் இணைத்துக்கட்டப்பட்ட அப்பறா தூளியில் கற்றை கற்றையான கூர்மையான அம்புகளை சேர்ந்துவைத்திருப்பர். இடது இடையில் குறுவாளை கச்சையினுள் தயார்நிலையில் வைத்திருப்பர். வலது கையில் நீண்ட (நெடிய) காற்றுப்புகாதஇடத்தில்கூட நுழைந்துவிடும் கூர்மையான வில்லை தயார்நிலையில் பிடித்துக்கொண்டு திரிவர்.இவர்கள் கரந்தை மறவர் (அகம்.35) ஆயினும் மழவர்களைக்காட்டிலும், மாவலிமை மிக்கவரான களவர் கோமான், மழவர்களுடன் விற்போர் புரிந்து, சரமாரியான அம்புமழை பொழிந்து அவர்களை வென்று அடக்கியதையும் நாம் அறியமுடிகிறது. ஆகவே, மழவர்கள் தங்கள் விருப்பம்போல் எங்குவேண்டுமானாலும் சுற்றித்திரிந்து வேங்கட மலையிலும் சுற்றித்திரிந்த காலத்தில் வாழ்ந்தவர் களவர் கோமான் புல்லி என்பதை நோக்குங்கால், அவருடைய காலம் கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலமாக இருக்கக்கூடும் என்பதுடன், களவர்களே தொண்டைமான் என்ற பட்டப்பெயர் பெற்றனர் என்பதையும் நோக்குங்கால், களவர் என்னும் சொல் காலத்தால் மிகவும் தொன்மையானது(கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது) என்பதையும் கருத்தில் கொள்ளுங்கால், தொண்டைமான் என்ற பட்டம் கள்ளர்களுக்கு வழங்கப்பட்டகாலம் மிகவும் தொன்மையான கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டகாலமே என்பது தெளிவான முடிவாகும். (தொடரும். . .பாகம்-3)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக